
7 படங்கள்
கண்ணோட்டம்
வங்கடை அல்லது வங்கடைப் பாறை என்பது ஒரு கடல் மீன் இனமாகும். இது ஜாக் மற்றும் பாரை குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வங்கடை மீன்களானது வெப்பமண்டல இந்தோ பசிபிக் பகுதி முழுவதும் பரவி உள்ளது. மேற்கில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கில் தொங்கா வரையும், வடக்கில் யப்பான் மற்றும் தெற்கில் ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இது பாறை மீன்களின் கூட்டத்தோடு சேர்ந்து திரியும். இதன் செவுல் மூடியில் உள்ள கருப்புத் திட்டும், நீண்டு வளைந்த பக்கத் துடுப்பும் இவற்றை எளிதில் அடையாளம் காணப் பயன்படுகின்றன. இதில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய மீன் 80 செமீ நீளம் மற்றும் 4 கிலோ எடையுள்ளது. இருப்பினும் இது 40 செமீக்கும் குறைவான நீளத்திலேயே பொதுவாக காணப்படுகிறது. இது ஒரு இரைகௌவல் இனமாகும். இது பலவகையான மீன்களையும், தலைக்காலிகளையும், ஓட்டுடைய கணுக்காலிகளையும் உணவாக கொள்கிறது. இந்த இனம் வளரவளர உணவில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. வங்கடை மீன்களில் பெண் மீன்கள் 22 செமீ அளவு, ஆண் மீன்கள் 26.4 செமீ அளவு அடையும்போது பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இந்தியாவில் மார்ச் மற்றும் சூலை மாதங்களுக்கு இடையில் முட்டையிடுகின்றன, அங்கு குடம்பி வளர்ச்சி மற்றும் மார்போமெட்ரிக்ஸ் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.